< Back
தேசிய செய்திகள்
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியரின் லட்சியம் - பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியரின் லட்சியம் - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
27 July 2024 6:54 PM IST

2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியரின் லட்சியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி,

இந்தியாவில் 1950ம் ஆண்டு மத்திய திட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த திட்டக்குழு அரசின் ஆண்டு திட்டங்கள், 5 ஆண்டு திட்டங்களை தீர்மானிக்கும் அமைப்பாகும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக 2015ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதையடுத்து, நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், 9வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு மாநில முதல் - மந்திரிகள், யூனியன்பிரதேச கவர்னர்கள், மத்திய மந்திரிகள், நிதி ஆயோக் அமைப்பின் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர். ஆனால், மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டதாக கூறி இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆளும் மாநில முதல்-மந்திரிகள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தனர். அதேவேளை, மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால், கூட்டதில் பேசுவதற்கு போதிய நேரம் கொடுக்கப்படாமல் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி நிதி ஆயோக் கூட்டத்தில் பாதியிலேயே மம்தா பானர்ஜி வெளியேறினார்.

அதேவேளை, பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியரின் லட்சியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது, 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்பதே அனைத்து இந்தியர்களின் லட்சியமாக உள்ளது. மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளதால் இந்த லட்சியத்தை நிறைவேற்றுவதில் மாநில அரசுகள் முக்கிய பங்காற்றலாம்.

இது தொழில்நுட்பம், புவிசார் அரசியல் மாற்றம் மற்றும் வாய்ப்புகளுக்கான காலம். இந்த வாய்ப்புகளை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சர்வதேச முதலீடுகள் ஈர்க்கும் வகையில் கொள்கைகளை வகுக்க வேண்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான முன்னேற்ற படிக்கட்டுகள் இவை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்