< Back
தேசிய செய்திகள்
அயோத்தி ரெயிலுக்கு தீவைக்க வேண்டும் - மிரட்டிய ரெயில்வே ஊழியர் கைது
தேசிய செய்திகள்

அயோத்தி ரெயிலுக்கு தீவைக்க வேண்டும் - மிரட்டிய ரெயில்வே ஊழியர் கைது

தினத்தந்தி
|
24 Feb 2024 1:41 PM IST

அயோத்தியில் இருந்து திரும்பிய ரெயிலுக்கு தீ வைப்பதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்

பெங்களூரு,

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அயோத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து அயோத்திக்கு ஏராளமான பக்தர்கள் சிறப்பு ரெயிலில் சென்றனர். பின்னர் அவர்கள் அயோத்தியில் இருந்து மீண்டும் மைசூரு நோக்கி ரெயிலில் பயணித்தனர்.

அவர்கள் வந்த ரெயில் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்த போது அவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கங்களை எழுப்பினர். அந்த சமயத்தில் அந்த ரெயிலில் சிலர் ஏற முயன்றனர். அப்போது ரெயிலில் இருந்த பக்தர்கள் இந்த ரெயில் அயோத்தியில் இருந்து வருவதாகவும், தாங்கள் அனைவரும் முன்பதிவு செய்ததாகவும் கூறி உள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அயோத்தியில் இருந்து வந்தவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர்களில் ஒருவர் இந்த ரெயிலை தீவைத்து எரிக்க வேண்டும் என ஆக்ரோஷமாக கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது.

இதையடுத்து மைசூரு பக்தர்கள் நடைமேடையில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவலின்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். மேலும் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர்.

விசாரணையில் ரெயிலுக்கு தீ வைக்க வேண்டும் என கூறியவர் உப்பள்ளி ரெயில்வே மண்டலத்தில் ஊழியராக இருக்கும் ஷேக்ஷவாலி சாஹேப் என்பது தெரிந்தது. மேலும் உப்பள்ளிக்கு செல்வதற்காக ரெயிலில் அவர் ஏற முயன்றபோது அவரை ஏறவிடாமல் பயணிகள் தடுத்ததாகவும், ஜெய்ஸ்ரீ ராம் என தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதாலும் அவர் கோபத்தில் ரெயிலுக்கு தீவைக்க வேண்டும் என கூறியதாக ஒப்பு கொண்டார். இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்