சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 போலீசாரை சிறை லாக்கப்பில் அடைத்த மாவட்ட எஸ்.பி. - அதிர்ச்சி சம்பவம்
|சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 போலீசாரை மாவட்ட எஸ்.பி. சிறை லாக்கப்பில் அடைத்து வைத்துள்ளார்
பாட்னா,
பீகார் மாநிலம் நவடா நகரில் போலீஸ் அதிகாரி ஒருவர், தனக்கு கீழ் பணிபுரியும் 5 அதிகாரிகளை லாக்கப்பிற்குள் வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு 9 மணியளவில் காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் மங்லா வழக்குகளை மறுஆய்வு செய்ய நவடா நகர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது சில அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டு கோபமடைந்த அவர், அவர்களை லாக்கப்பில் வைக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது..
இதுகுறித்த செய்திகள் மறுநாள் வாட்ஸ்அப்பில் வைரலானது. இதற்கு மறுப்பு தெரிவித்த எஸ்பி மங்லா அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் இது வெறும் போலி செய்தி என்றும் கூறினார். இதையடுத்து இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
சிசிடிவி காட்சிகளில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்ருகன் பாஸ்வான், ராம்ரேகா சிங், மற்றும் ஏஎஸ்ஐக்கள் சந்தோஷ் பாஸ்வான், சஞ்சய் சிங், ராமேஷ்வர் உரான் ஆகியோர் நவடா நகர் காவல் நிலையத்தில் உள்ள லாக்கப்பிற்குள் உள்ளனர். இரண்டு மணி நேரம் கழித்து, நள்ளிரவில் அவர்கள் வெளியே விடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பீகார் காவல்துறை சங்கம் இந்த சம்பவத்திற்கு கவுரவ் மங்லா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து பீகார் காவல்துறை சங்கத்தின் தலைவர் மிருத்யுஞ்சய் குமார் சிங் கூறும்போது, எஸ்பியிடம் பேச முயற்சித்ததாகவும், ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை என்றும் கூறினார்.
எஸ்பியால் சிசிடிவி காட்சிகள் சேதப்படுத்தப்படலாம் என்று அச்சம் தெரிவித்த மிருத்யுஞ்சய், எஸ்பியின் நடவடிக்கைகள் ஜூனியர் அதிகாரிகளிடையே மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார். இதற்கிடையில், பீகார் தலைமைச் செயலாளர், தனக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகளை கையாள்வதில் தீவிர நடவடிக்கைகளை நாட வேண்டாம் என்று அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.