தீ வைத்தவர்களை தீயால் திருப்பி அடித்த ராவணன்; பதறி ஓடிய கூட்டம்...! - வைரல் வீடியோ
|நவராத்திரியையொட்டி வட இந்தியாவில் அரக்கர்களின் அரசனாக கூறப்படும் 10 தலை கொண்ட ராவணனின் உருவபொம்மை எரிப்பது வழக்கம்.
லக்னோ,
இந்து மத பண்டிகையான நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, வட இந்தியாவில் நவராத்திரி விஜயதசமியின் போது அரக்கர்களின் அரசனாக சித்தரிக்கப்பட்ட 10 தலைகொண்ட ராவணனின் பிரம்மாண்ட உருவபொம்மையை எரிப்பது வழக்கம்.
இந்து மத இதிகாச புராணங்களில் ஒன்றான ராமாயணத்தில் கடவுள் ராமரின் எதிரியாக சித்தரிக்கப்படுபவர் ராவணன். கடவுள் சிவபெருமானின் தீவிர பக்தனாக அறியப்படுபவர் 10 தலைகொண்டவர் ராவணன். இவர், ராமனின் மனைவியான சீதையை இலங்கைக்கு சிறைபிடித்து சென்றதாக ராமாயண இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது. கடவுள் ராமர் இலங்கைக்கு சென்று ராவணனை அழித்து சீதையை மீட்டதாக ராமாயண புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, ராவணனை வீழ்த்தி அவரிடமிருந்து சீதையை ராமன் மீட்கும் நிகழ்வை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் நவராத்திரி தசராவின் போது 10 தலைகொண்ட ராவணனின் உருவபொம்மை எரிப்பது வட இந்தியாவில் வழக்கம். அந்த வகையில், வட இந்தியாவின் பல இடங்களில் 10 தலைகொண்ட ராவணனின் உருவபொம்மைக்கு தீ வைத்து எரிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிலையில், நவராத்திரி தசரா பண்டிகையின் முக்கிய நாளான விஜயதசமி நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது.
அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள அரசுக்கல்லூரியில் உள்ள மைதானத்தில் 10 தலை கொண்ட ராவணனின் பிரம்மாண்ட உருவபொம்மை எரிப்பதற்காக வைக்கப்பட்டது.
ராவணனின் உருவபொம்மை எரிப்பதை காண்பதற்கு அந்த மைதானத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடி இருந்தனர். அப்போது, 10 தலை ராவணனின் உருவபொம்மைக்கு தீ வைக்கப்பட்டது.
பிரம்மாண்டமான ராவணனின் உருவபொம்மை தீப்பற்றி எரிந்தது. தீ வேகமாக எரிந்த நிலையில் திடீரென ராவணன் உருவபொம்மையில் இருந்து தீப்பிளம்பு சிதறியது. பட்டாசு வெடிப்பது போன்று ராவணன் உருவபொம்மையில் இருந்து தீப்பிளம்புகள் மின்னல் வேகத்தில் வெடித்து சிதறின.
அந்த தீப்பிளம்புகள் அங்கு கூடியிருந்தவர்கள் மீது விழுந்தது. இதனால், அங்கு கூடி இருந்தவர்கள் அலறியடித்து பதறி ஓட்டம்பிடித்தனர். சில நிமிடங்கள் கழித்து தீ முழுவதும் எரிந்து முடிந்ததால் நிலைமை கட்டுக்குள் வந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்து தீ வைத்தவர்களை ராவணன் தீயால் திருப்பி அடிக்கிறார் என பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.