கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்...கணவர் பெயரை நெற்றியில் பச்சை குத்திய இளம்பெண்...!
|வண்ண வண்ண டாட்டூக்கள் இன்றைய இளம் தலைமுறையின் புதிய பேஷனாக மாறிவிட்டது.
பெங்களூரு,
டாட்டூ எனப்படும் பச்சை குத்துதல் மீதான மோகம் இன்றைய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் இடையே வேகமாக அதிகரித்து வருகிறது. வண்ண வண்ண டாட்டூக்கள் இன்றைய இளம் தலைமுறையின் புதிய பேஷனாக மாறிவிட்டது. டாட்டூ குத்துக்கொண்டால் அதை அழிக்கவே முடியாது, உடலோடு கலந்துவிடும் என்ற நிலையும் இப்போது மாறிவிட்டது.
இந்தநிலையில், கணவன் மீது அன்பை வெளிப்படுத்தும் வகையில், அவரது பெயரை பெங்களூருவில் பெண் ஒருவர் தனது நெற்றியில் 'டாட்டூ' ஆக குத்தி கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரல் ஆக பரவி வருகிறது.
உலகில் பல திருமணமான ஜோடிகள் தங்களது அன்பை வெளிப்படுத்துவதற்கு என்றே பல விஷயங்களை செய்து தங்களது துணையை ஆச்சர்யப்படுத்துவார்கள். இதற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கொடுப்பது, அவர்களின் விருப்பம் மற்றும் ஆசையை நிறைவேற்றுதல், வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்லுதல் என பலவற்றை செய்வார்கள்.
அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவன் மீதான அன்பை வெளிப்படுத்த அவரது பெயரை நெற்றியில் 'டாட்டூ' ஆக குத்திக் கொண்டுள்ளார். அந்த பெண்ணின் பெயர் இதுவரை தெரியவில்லை. இருப்பினும் அவரது கணவர் பெயர் சதீஷ் என்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. முதலில், பெயரை எழுதி அந்த பெண்ணின் நெற்றியில் பேப்பரில் ஒட்டிய 'டாட்டூ' கலைஞர், பிறகு இயந்திரம் மூலம் பெயரை 'டாட்டூ ஆக குத்தினார். அப்போது, அந்த பெண் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.