நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 'விக்ரம் லேண்டர்': பெங்களூரு இஸ்ரோவில் வெற்றி கொண்டாட்டம்
|சந்திரயான்-3 விண்கல விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் பெங்களூருவில் இஸ்ரோவில் விஞ்ஞானிகளும், பொதுமக்களும் வெற்றியை கொண்டாடினார்கள்.
பெங்களூரு:
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கடந்த 14-ந்தேதி 'சந்திரயான்-3' என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. முதலில் பூமியின் புவிவட்ட பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-3 விண்கலம், படிப்படியாக நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு மாற்றப்பட்டு, அதன் சுற்றுவட்ட பாதை குறைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து 'விக்ரம் லேண்டர்' கருவி பிரிக்கப்பட்டது.
இந்த 'லேண்டர்' கருவி நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த நிகழ்வு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த லேண்டரை கட்டுப்படுத்தும் தரைகட்டுப்பாட்டு மையம் பெங்களூரு பீனியாவில் அமைந்துள்ளது. இந்த மையத்தின் முன்பு நேற்று ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர். அவர்கள் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கும் தருணத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். அவர்கள் மட்டுமின்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகளும் ஆர்வத்துடன் காத்து கொண்டிருந்தனர்.
'லேண்டர்' வெற்றிகரமாக தரையிறங்கியதும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் கைத்தட்டியும், ஆரவாரம் செய்தும் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் வெளியே காத்திருந்த பொதுமக்களும், வெற்றிகரமாக தரையிறங்கியதும் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
மேலும், இஸ்ரோ முன்பு கூடியிருந்த மக்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் தேசிய கொடியை அசைத்து ஆரவாரம் செய்தனர். பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்களும் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தி மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். மேலும் 'இந்தியா வாழ்க' எனவும் கோஷமிட்டனர்.
இதனால் அந்த இடமே மகிழ்ச்சியாக காணப்பட்டது. இஸ்ரோ மையம் முன்பு மட்டுமின்றி பெங்களூரு முழுவதும் ஏராளமானோர் ேமளதாளங்கள் முழுங்க, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.