இந்திய விரோத செயல்களில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் - துணை ஜனாதிபதி குற்றச்சாட்டு
|இந்தியாவுக்கு எதிரான நாசகார செயல்பாடுகளில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டு வருவதாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி,
16-வது சிவில் சர்வீஸ் தினத்தையொட்டி, டெல்லியில் 2 நாள் கொண்டாட்டம் தொடங்கியது. அதை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
நமது ஜனநாயகம் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. அதன் தூண்களான நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும்.
அப்படி செயல்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொன்றும் அவரவர் எல்லைக்குள் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும்.
நாசகார செயல்பாடுகள்
சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து உருவாகும் ஆபத்து, இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அவை நமது நாகரிக நெறிமுறைகளை அழிக்கவும், வளர்ச்சியை சீர்குலைக்கவும் இந்திய விரோத நாசகார செயல்பாடுகளின் மையங்களாக திகழ்ந்து வருகின்றன.
சிலர் நமது ஜனநாயக மற்றும் அரசியல் சட்ட அமைப்புகளுக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் மாற்றப்பட வேண்டும்.
ஜனநாயகம்
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயகத்தின் தாய். கிராமம், மாநிலம் என அனைத்து மட்டத்திலும் துடிப்பாக செயல்படுகிறது.
வேறு எந்த நாட்டின் அரசியல் சட்டத்திலும் பஞ்சாயத்துகளோ, நகராட்சிகளோ இடம்பெறவில்லை. நமது அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் அவை சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் பேசினார்.