பஜ்ரங்தள குறித்த அவதூறுக்காக ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்; கார்கேவுக்கு விசுவ இந்து பரிஷத் நோட்டீஸ்
|கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தள குறித்த அவதூறுக்காக ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கேவுக்கு விசுவ இந்து பரிஷத் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விசுவ இந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
விசுவ இந்து பரிஷத் நோட்டீஸ்
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு விசுவ இந்து பரிஷத்தின் சண்டிகார் பிரிவின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விசுவ இந்து பரிஷத்தின் வக்கீலும், அதன் சட்டப்பிரிவு இணைத்தலைவருமான சகில் பன்சால் அனுப்பியுள்ள அந்த நோட்டீசில், 'கர்நாடக தேர்தல் அறிக்கையில் நீங்கள், விசுவ இந்து பரிஷத்தின் இணை அமைப்பான பஜ்ரங்தள குறித்து அவதூறு தகவல்களை வெளியிட்டிருக்கிறீர்கள். தடை விதிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, 'சிமி' போன்றவற்றுடன் எங்கள் அமைப்பை ஒப்பிட்டு குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
ரூ.100 கோடி இழப்பீடு
நாட்டுக்குச் சேவையாற்றிவரும் எங்களுக்கு எதிராக அவதூறு நோக்கத்துடன் தாங்கள் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள், எங்கள் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது.
எனவே அதற்கான இழப்பீடாக விசுவ இந்து பரிஷத்துக்கும், பஜ்ரங்தள அமைப்புக்கும் ரூ.100 கோடியை இழப்பீடாக 14 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.'
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் குறித்து காங்கிரஸ் கட்சி உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.