மூத்த காங்கிரஸ் தலைவரும், உ.பி., முன்னாள் கவர்னருமான அஜீஸ் குரேஷி காலமானார்
|மூத்த காங்கிரஸ் தலைவரான குரேஷியின் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
போபால்,
உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் கவர்னரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜீஸ் குரேஷி (வயது 83) நீண்டகால உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், போபாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்றும் அவர் உறவினர் சுபியன் அலி தெரிவித்துள்ளார்.
குரேஷி உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் கவர்னராக பதவி வகித்தவர்.
அவர் முதன்முதலில் 1972ம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் செஹோர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் 1984 இல் மக்களவை உறுப்பினரானார். இவரது மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.