< Back
தேசிய செய்திகள்
நேகாவின் தந்தையை செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய கர்நாடக முதல்-மந்திரி
தேசிய செய்திகள்

நேகாவின் தந்தையை செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய கர்நாடக முதல்-மந்திரி

தினத்தந்தி
|
23 April 2024 5:11 PM IST

கொலை செய்யப்பட்ட நேகாவின் தந்தையை செல்போனில் தொடர்புகொண்ட கர்நாடக முதல்-மந்திரி ஆறுதல் கூறினார்.

பெங்களூரு,

கா்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிரஞ்சன் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கவுன்சிலராகவும் உள்ளார். இவரது மகள் நேகா ஹிரேமட் (வயது 24).

நேகா அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். அந்த கல்லூரியில் பெலகாவியை சேர்ந்த பயாஜ் (24) என்பவரும் பி.சி.ஏ. படித்து வந்தார்.

இதனிடையே, கடந்த 18ம் தேதி தேர்வு எழுத வந்த நேகாவை சக மாணவரான பயாஸ் கல்லூரி வளாகத்தில் வைத்து கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். ஒருதலை காதலால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொலை கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக அரசியலிலும் பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக, நேகா கொலை குறித்து கர்நாடக உள்துறை மந்திரி பரமேஷ்வரா தெரிவித்த கருத்து சர்ச்சையானது. செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை மந்திரி, நேகாவும், பயாசும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், பயாசை விட்டு விலகி செல்ல நேகா முயற்சித்துள்ளார். மேலும், பயாசை திருமணம் செய்ய நேகா மறுத்துள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பயாஸ் நேகாவை குத்திக்கொலை செய்துள்ளார். இது லவ் ஜிகாத் கொலை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை

இவ்வாறு அவர் கூறினார்.

நேகா கொலை குறித்து மாநில உள்துறை மந்திரி பரமேஷ்வராவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தனது கருத்துக்கு பரமேஷ்வரா மன்னிப்புகோரியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது கருத்து நேகாவின் பெற்றோரை பாதித்திருந்தால் அதற்கு நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட நேகாவின் தந்தையை செல்போனில் தொடர்புகொண்ட கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ஆறுதல் கூறினார்.

நேகாவின் தந்தை நிரஞ்சன் ஹிரேமட்டிடம் செல்போனில் தொடர்புகொண்டு சித்தராமையா கூறியதாவது, நிரஞ்சன் மன்னித்துவிடுங்கள். நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம். நடந்தது மிகப்பெரிய குற்றம். சம்பவம் தொடர்பாக சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டு குற்றவாளிக்கு தக்க தண்டனை கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்