ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு
|ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
புதுடெல்லி,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பகுதியில் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றவை. இதுதவிர சில மாவட்டங்களில் கோவில் விழாக்களையொட்டியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.
இதற்கிடையே கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை ஏற்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராடினர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி ஒத்தி வைத்தது.
இந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறுகிறது.