உப்பள்ளியில் துணிகரம்நகைப்பட்டறையில் புகுந்து ரூ.65 லட்சம் தங்கம் கொள்ளை
|உப்பள்ளியில் துணிகரம் நகைப்பட்டறையில் புகுந்து ரூ.65 லட்சம் தங்கம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசாா் தேடிவருகின்றனர்
உப்பள்ளி
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுனை சேர்ந்தவர் கைலாஜ் ஜாதவ். இவர் உப்பள்ளி மராட்டஹள்ளி கோழிபஜாரில் நகைப்பட்டறை வைத்துள்ளார். இந்த பட்டறையில் பழைய தங்க நகைகளை உருக்கி, புதிய தங்க நகையை கைலாஜ் ஜாதவ் தயாரித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல் தங்கத்தை உருக்கி வைத்துவிட்டு கைலாஜ் ஜாதவ் பட்டறையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று காலை பட்டறைக்கு ைகலாஜ் ஜாதவ் சென்றார். அப்போது பட்டறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தாா்.
அப்போது அங்கு உருக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 200 கிராம் தங்கம் மாயமாகி இருந்தது. இதனால் யாரோ மர்மநபர்கள் இரவில் பட்டறையில் புகுந்து தங்கத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.65 லட்சம் ஆகும்.
இதுகுறித்து கைலாஜ் ஜாதவ் உப்பள்ளி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் தடயஅறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் அங்கு பதிவாாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து உப்பள்ளி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.