'வெங்கையா நாயுடு எனது உண்மையான தோழர்; எமர்ஜென்சியை எதிர்த்து போராடியவர்' - பிரதமர் மோடி
|எமர்ஜென்சியை எதிர்த்து போராடிய வெங்கையா நாயுடுவை தனது உண்மையான தோழராக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றவர் வெங்கையா நாயுடு. இவர் ஆகஸ்ட் 11, 2017 முதல் ஆகஸ்ட் 10, 2022 வரை துணை ஜனாதிபதியாக பதவி வகித்தார். வெங்கையா நாயுடு இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான 3 புத்தகங்களை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று வெளியிட்டார்.
இதன்படி முன்னாள் நாளிதழ் ஆசிரியர் எஸ்.நாகேஷ் குமார் எழுதிய 'வெங்கையா நாயுடு- லைப் இன் சர்வீஸ்' என்ற வாழ்க்கை வரலாறு புத்தகம், வெங்கையா நாயுடுவின் முன்னாள் செயலாளரான சுப்பா ராவின், 'செலிபிரேட்டிங் பாரத்- இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு' என்ற புகைப்பட தொகுப்பு புத்தகம் மற்றும் தெலுங்கு மொழியில் சஞ்சய் கிஷோர் எழுதிய, 'மகாநேடா - வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை மற்றும் பயணம்' என்ற புத்தகம் ஆகிய 3 புத்தகங்களை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "அரசியலமைப்பின் கவுரவத்தை சீர்குலைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளுக்கு முன்பு எமர்ஜென்சியை அமல்படுத்தியது. எமர்ஜென்சிக்கு எதிராக போராடியவர்களில் வெங்கையா நாயுடுவும் ஒருவர். அந்த சமயத்தில் அவர் 17 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். எமர்ஜென்சி என்ற நெருப்பில் சோதிக்கப்பட்ட வெங்கையா நாயுடுவை எனது உண்மையான தோழராக கருதுகிறேன்.
அதிகாரம் என்பது மகிழ்ச்சிக்கான வழி அல்ல, அது சேவை மற்றும் தீர்மானத்திற்கான வழி என்பதை வாஜ்பாய் அரசுடன் சேர்ந்து பணியாற்றியபோது வெங்கையா நாயுடு நிரூபித்தார். அவர் கேட்ட துறை அவருக்கு கிடைத்திருக்கக் கூடிய சூழலில், ஊரக வளர்ச்சித்துறையே தனக்கு வேண்டும் என வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக வெங்கையா நாயுடு பணியாற்றினார்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.