கார் கடனுக்காக வாகன பறிமுதல்; ஏஜெண்டுகளை பயன்படுத்தும் வங்கிகள்... பாட்னா ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
|ஏஜெண்டுகளால் வாகன பறிமுதல் செய்வது என்பது சட்ட விரோதம் மற்றும் வாழ்க்கை மற்றும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
பாட்னா,
பீகாரின் பாட்னா நகரில் கார் வாங்கி விட்டு அதற்கான மாத தவணை தொகையை (இ.எம்.ஐ.) திருப்பி அடைக்காமல் சிலர் இருந்து உள்ளனர் என கூறப்படுகிறது. இதுபோன்ற நபர்களிடம் இருந்து கடன் வழங்கியவர்கள், அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து உள்ளனர்.
இதுபற்றி பாட்னா ஐகோர்ட்டில் 5 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அதில், இ.எம்.ஐ. கட்ட தவறிய வாடிக்கையாளர்களின் வாகனங்களை கட்டாயத்தின்பேரில் பறிமுதல் செய்ய உத்தரவிட உரிமை கோரியிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி ராஜீவ் ரஞ்சன் பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர் அளித்த தீர்ப்பில், வாடிக்கையாளர் ஒருவர் இ.எம்.ஐ. தொகையை செலுத்தவில்லை எனில், அதற்காக வாகன பறிமுதல் செய்ய மீட்புக்கான ஏஜெண்டுகளை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பயன்படுத்த முடியாது.
ஏஜெண்டுகளால் வாகன பறிமுதல் செய்வது என்பது சட்ட விரோதம் மற்றும் வாழ்க்கை மற்றும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என கூறியுள்ளார்.
அதுபோன்ற ஏஜெண்டுகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து, சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார். இந்த தவறுகளை செய்யும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டு உள்ளார்.
கடனுக்காக வாடிக்கையாளர் அடகு வைத்த பொருளை மீட்டு கொண்டு செல்லும், பாதுகாப்புக்கான பிரிவுகளை பின்பற்றி மட்டுமே வாகன கடன்கள் மீட்கப்பட வேண்டும் என்று வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு கோர்ட்டு தெரிவித்து உள்ளது.