உடுப்பியில் வீரசாவர்க்கர் பேனரை நிறுவினார், பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர்
|உடுப்பியில் வீரசாவர்க்கரின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனரை பா.ஜனதாவின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தேசிய பொதுச்செயலாளர் யாஷ்பால் சுவர்ணா நிறுவினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
உடுப்பியில் வீரசாவர்க்கரின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனரை பா.ஜனதாவின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தேசிய பொதுச்செயலாளர் யாஷ்பால் சுவர்ணா நிறுவினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வீரசாவர்க்கர் பேனர்
சிவமொக்காவில் கடந்த 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் வீரசாவர்க்கரின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனரை ஒரு தரப்பினர் அகற்றினர். இதுதொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இந்த பரபரப்பு சம்பவத்தின் பாதிப்பு தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களிலும் எதிரொலித்தது. அங்கும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் பா.ஜனதா பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தேசிய பொதுச்செயலாளர் யாஷ்பால் சுவர்ணா நேற்று உடுப்பிக்கு வந்தார். அவர் உடுப்பி டவுன் பிரம்மகிரி சர்க்கிளில் வீரசாவர்க்கரின் உருவப்படம் அச்சிடப்பட்ட ஒரு பேனரை நிறுவினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து யாஷ்பால் சுவர்ணா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தடை விதிக்க வேண்டும்
நாட்டில் எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எப்.ஐ. அமைப்புகள் அமைதியை சீர்குலைக்கின்றன. அந்த அமைப்புகளை காங்கிரஸ் பாதுகாக்கிறது. அதை தடுத்து அந்த அமைப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும். இந்துத்துவாவின் முன்னணி தலைவரான வீரசாவர்க்கரின் உருவப்படத்தை அகற்ற வலியுறுத்தும் காங்கிரஸ், நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனர்களை அகற்ற முன்வருவார்களா?.
இவ்வாறு அவர் கூறினார்.