வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். திரைப்பட பாணியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த அண்ணன்-தம்பி கைது
|ராஜஸ்தானில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
ஜெய்ப்பூர்,
பாலிவுட்டில் வெளியான 'முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.' திரைப்படம், தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' என்ற பெயரில் ரீமேக்கானது. அந்த படத்தில் மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து வெற்றி பெறுவதைப் போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் நிஜத்தில் அதே போன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வரும் மாணவர் பகீரத் ராம் விஷ்னோய். இவரது தம்பி கோபால் ராம், நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
இந்நிலையில் பகீரத் ராம் விஷ்னோய், தனது ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றிவைத்து, தனது தம்பி கோபால் ராமுக்கு பதிலாக நீட் தேர்வு எழுதச் சென்றுள்ளார். ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் உள்ள அந்திரி தேவி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் அவருக்கான தேர்வு மையம் அமைந்துள்ளது.
இதனிடையே அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல்துறையை தொடர்பு கொண்டு, ஒரு நபர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி வருகிறார் என்ற தகவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சகோதரர்கள் பகீரத் ராம் விஷ்னோய் மற்றும் கோபால் ராம் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.