15 லட்சம் பள்ளி மாணவர்களின் ஆதார் கார்டு தகவல்களில் மாறுபாடு
|சேர்க்கையின் போது வழங்கிய ஆவணங்களுடன் ஒப்பிடுகையில் 15 லட்சம் பள்ளி மாணவர்களின் ஆதார் கார்டு தகவல்களில் மாறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவற்றை திருத்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
ஆதார் கார்டு நகல் சமர்ப்பிப்பு
கர்நாடகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களின் ஆதார் கார்டுகளை படிக்கும் பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை சார்பில் கூறப்பட்டு இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை உள்ளிட்ட காரணங்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கார்டுகளின் தகவல்கள் கட்டாயமாக்கப்பட்டது.
இதையடுத்து பள்ளிகள் சார்பில் மாணவர்களிடம் இருந்து ஆதார் கார்டு நகல்கள் பெறப்பட்டு அவற்றை இணையத்தில் பதிவேற்றும் பணியில் பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பெற்றோர் சார்பில் கொடுக்கப்பட்ட ஆதார் கார்டு தகவல்களில் தவறுகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது பள்ளிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும்போது பிறப்பு சான்றிதழ்களை கொடுத்து இருந்தனர்.
15 லட்சம் மாணவர்களின் தகவல்களில் மாறுபாடு
தற்போது நடத்தப்பட்ட சோதனையில் ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ்களில் உள்ள பெயர்கள் மாறுபட்டு உள்ளது. இதனால் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் தங்களின் ஆதார் கார்டு தகவல்களை பள்ளிகளில் சமர்ப்பித்து உள்ளனர்.
இதில் 78 லட்சம் பேரின் ஆதார் கார்டு தகவல்களும், அவர்கள் சேர்க்கையின் போது வழங்கிய தகவல்களும் ஒன்றாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் 15 லட்சம் மாணவர்களின் ஆதார் மற்றும் பிறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களில் இடம் பெற்றுள்ள பெயர், முகவரி, வயது, பிறப்பு தேதி உள்ளிட்டவற்றில் மாறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது.
பள்ளி கல்வித்துறை உத்தரவு
குறிப்பாக ஆதார் கார்டுகளில் மாணவர்கள் பெயருடன் பெற்றோர் பெயர்கள் இருப்பதும், மாணவர் சேர்க்கை ஆவணங்களில் மாணவர் பெயர் மட்டும் இருப்பதும் தெரியவந்தது. எனவே ஆதார் கார்டுகளில் உள்ள தவறான தகவல்களை திருத்தம் செய்து எடுத்து வர பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் இதுதொடர்பாக பெற்றோர், ஆசிரியர்கள் கூட்டங்கள் நடத்தப்பட்டு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.