வாரணாசிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் தெலுங்கானாவில் அவசர தரையிறக்கம்
|பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் தெலுங்கானாவில் இன்று காலை அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் இருந்து உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகர் நோக்கி 6இ897 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் 137 பயணிகள் இருந்தனர்.
இந்நிலையில், விமானத்தில் இன்று காலை தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, காலை 6.15 மணியளவில் விமானம் தெலுங்கானாவில் ஷம்ஷாபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
இதுபற்றி குடிமக்கள் விமான போக்குவரத்து இயக்ககம் வெளியிட்ட செய்தியில், தொழில்நுட்ப கோளாறால் விமானம் வேறு பகுதிக்கு திசைமாற்றி விடப்பட்டது.
விமானத்தில் இருந்த 137 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தும்படியும் இயக்ககம் உத்தரவிட்டு உள்ளது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.