ஓவைசி பயணித்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஜன்னல் கண்ணாடி கல்வீச்சில் சேதம்
|குஜராத்தில் அசாதுதீன் ஓவைசி பயணித்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஜன்னல் கண்ணாடி கல்வீச்சில் சேதம் அடைந்து உள்ளது.
சூரத்,
குஜராத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி மற்றும் அக்கட்சியின் குஜராத் தலைவர் சபீர் கப்லிவாலா உள்ளிட்டோர் பயணித்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஜன்னல் கண்ணாடி மீது மர்ம நபர்கள் கல்வீசி உள்ளனர்.
இதுபற்றி அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான வாரீஸ் பதான் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஆமதாபாத் நகரில் இருந்து சூரத் நகர் நோக்கி எங்களது கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, சபீர்கப்லிவாலா மற்றும் கட்சியின் தேசிய குழுவினர் உள்பட நாங்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தோம்.
நாங்கள் ரெயில் நிலையம் வந்தடைவதற்கு 25 கி.மீ. தொலைவு இருக்கும்போது, ரெயில் மீது அடையாளம் தெரியாத நபர்களால் கல் ஒன்று வீசப்பட்டது. இதில், ரெயிலின் ஜன்னல் கண்ணாடி சேதம் அடைந்தது. அந்த பெட்டியில் ஓவைசி அமர்ந்து இருந்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, சிலர் அடுத்தடுத்து கற்களை வீசினர். நீங்கள் கற்களை வீசலாம். அல்லது மழையாக துப்பாக்கி சூடு பொழியலாம். ஆனால் எங்களது உரிமைகளுக்கான குரல் ஒலிப்பது ஒருபோதும் நிற்காது என தெரிவித்து உள்ளார்.
இதன்பின்பு, குஜராத் சென்றடைந்த அவர்கள் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பதான், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஜன்னல் கண்ணாடி கல்வீச்சில் சேதம் அடைந்த விவரம் பற்றி பேசினார்.
ரெயிலின் ஜன்னல் கண்ணாடி கல்வீச்சில் சேதம் அடைந்த புகைப்படங்களையும் அவர் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.