நான் தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நம்பிக்கை, சுற்றுலாவை இணைக்கும்: பிரதமர் மோடி பேச்சு
|நான் தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆனது நம்பிக்கை, நவீனத்துவம், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுலாவை இணைக்கும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் ரூ.11,300 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று வருகை தந்து உள்ளார்.
இதற்காக ஐதராபாத் நகரில் உள்ள பேகம்பட் விமான நிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் இன்று காலை வந்திறங்கினார். பிரதமர் மோடி ஐதராபாத் நகரில் விமான நிலையத்தில் வந்திறங்கியதும், அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் உயரதிகாரிகள், பிற முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இதன்பின்னர் பிரதமர் மோடி, செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரெஸ் ரெயிலில் ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு பள்ளி குழந்தைகளுடன் உரையாடினார். அதன்பின்பு, ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், செகந்திராபாத் ரெயில் நிலையம், உலக தரம் வாய்ந்த ஒன்றாக உருவாவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி இன்று நாட்டுகிறார். செகந்திராபாத் மற்றும் மெஹபூப் நகருக்கு இடையே 13 புதிய புறநகர் ரெயில் சேவையையும் அவர் தொடங்கி வைக்க இருக்கிறார் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நான் தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆனது நம்பிக்கை, நவீனத்துவம், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுலாவை இணைக்கும் என கூடியிருந்த பொதுமக்களின் முன் பேசியுள்ளார்.