நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்களின் வேகம் குறைப்பு
|வந்தே பாரத் ரெயில் மணிக்கு அதிகபட்சமாக 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வந்தே பாரத் ரெயில் சேவை நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடங்கப்பட்டது. இந்த ரெயில் மணிக்கு அதிகபட்சமாக 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியதாக அமைக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் வந்தே பாரத் ரெயிலின் சராசரி வேகம் தற்போது 76.25 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த செய்தி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரியவந்திருக்கிறது. 160 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்க முடியும் என்றாலும், பெரும்பாலான வழித்தடங்கள் அதற்கு ஏற்ற வகையில் இல்லாததால் வேகம் குறைக்கப்பட்டு உள்ளது. தற்போது அதிகபட்ச வேகமாக 130 கி.மீ. இருக்கிறது. ஆனால் டெல்லி-ஆக்ரா வழித்தடத்தில் மட்டும் அதை விட அதிக வேகத்தில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில்களின் சராசரி வேகம் 2020-2021-ம் ஆண்டு 84.48 கி.மீட்டராக இருந்தது. அதற்கு அடுத்த ஆண்டு அது 81.38 கி.மீட்டர் ஆனது. 2023-2024-ம் ஆண்டு 76.25 கி.மீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது. உட்கட்டமைப்பு பணிகள் காரணமாக வேகம் குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.