< Back
தேசிய செய்திகள்
வந்தேபாரத் ரெயில் விமானத்தில் செல்லும் அனுபவத்தை பயணிகளுக்கு கொடுக்கும்
தேசிய செய்திகள்

வந்தேபாரத் ரெயில் விமானத்தில் செல்லும் அனுபவத்தை பயணிகளுக்கு கொடுக்கும்

தினத்தந்தி
|
11 Nov 2022 3:14 AM IST

வந்தே பாரத் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் விமானத்தில் செல்லும் அனுபவத்தை பயணிகளுக்கு கொடுக்கும் என்று என்ஜின் டிரைவர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

பெங்களுரு:

வந்தே பாரத் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் விமானத்தில் செல்லும் அனுபவத்தை பயணிகளுக்கு கொடுக்கும் என்று என்ஜின் டிரைவர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் ரெயில்

சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வந்தே பாரத் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது. தென் இந்தியாவில் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுவாகும். பெங்களூரு சங்கொள்ளி ராயண்ணா ரெயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் பெங்களூரு-மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

முன்னதாக கடந்த 7-ந் தேதி சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டத்தின்படி இயக்கப்பட்டது. அன்றைய தினம் வந்தே பாரத் ரெயிலில் என்ஜின் டிரைவராக இருந்தவர் பெங்களூருவை சேர்ந்த சுரேஷ் பாபு(வயது 47) ஆவார். வந்தா பாரத் ரெயில் இயக்கியது குறித்து அவர் கூறி இருப்பதாவது:-

விமானத்தில் பயணிக்கும் அனுபவம்

நான் கடந்த 25 ஆண்டுகளாக என்ஜின் டிரைவராக பணியாற்றி வருகிறேன். மற்ற ரெயில்களை இயக்குவதற்கும், வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இந்த ரெயிலை இயக்கியதில் மிகுந்த மகிழ்ச்சி கிடைத்தது. இந்த ரெயிலில் பயணிப்பது பற்றி கேட்கிறீர்கள். கர்நாடக அரசின் சாதாரண பஸ்களில் செல்வதற்கும், வால்வோ ஆம்னி சொகுசு பஸ்களில் செல்வதற்கும் நிறைய வித்தியாசம் நமக்கு கிடைக்கும்.

அதுபோல் தான் வந்தே பாரத் ரெயிலில் பயணிகள் அமர்ந்து செல்வது விமானத்தில் பயணிக்கும் அனுபவத்தை பயணிகளுக்கு கொடுக்கும். உயரிய தொழில் நுட்பம், அதிவேகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை சொல்லிக் கொண்டே செல்லலாம். வந்தே பாரத் ரெயில், மெட்ரோ ரெயில் போன்றது என்று கூட சொல்லலாம்.

3 என்ஜின் டிரைவர்கள்

வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்காக சென்னையில் 10 நாட்கள் எனக்கு பயிற்சி வழங்கப்பட்டது. சென்னை முதல் மைசூரு வரை இயக்கப்படும் இந்த ரெயிலில் என்னுடன் சேர்த்து மேலும் 2 என்ஜின் டிரைவர்கள் இருப்பார்கள். பெங்களூரு-மைசூரு இடையே நான் இயக்குவேன். பெங்களூரு முதல் ஜோலார்பேட்டை வரை மற்றொருவரும், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வரை இன்னொரு என்ஜின் டிரைவரும் இயக்குவார்.

வந்தே பாரத் ரெயிலின் முக்கிய அம்சங்களில் வேகம் முக்கியமானதாகும். எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க வேண்டும் என்பது பற்றி அதிகாரிகள் தகவல் தெரிவிப்பார்கள். பெங்களூரு-மைசூரு இடையே 100 கிலோ மீட்டர் வேகம் வரை ஓட்டலாம்.

இவ்வாறு சுரேஷ் பாபு கூறினார்.

மேலும் செய்திகள்