< Back
தேசிய செய்திகள்
சுய முன்னேற்றத்துக்கு வாசிப்பு பழக்கம் அவசியம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு
தேசிய செய்திகள்

சுய முன்னேற்றத்துக்கு வாசிப்பு பழக்கம் அவசியம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு

தினத்தந்தி
|
27 Dec 2022 11:20 PM IST

சுய முன்னேற்றத்துக்கு வாசிப்பு பழக்கம் முக்கியம். அது வாழ்நாள் முழுவதும் மாணவர்களுக்கு உதவும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

கல்வியே அடித்தளம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு, தெலுங்கானாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஐதராபாத்தில் உள்ள கேசவ் நினைவு கல்வி நிறுவனத்தில் நடந்த 75-ம் ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அவர் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

கல்வி என்ற அடித்தளத்தில்தான் ஒரு நாடு கட்டி எழுப்பப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரின் முழு திறமையை வெளிக்கொணர கல்விதான் திறவுகோல்.

வாசிப்பு பழக்கம்

இது, இணையதளம் மற்றும் சமூக வலைத்தள காலம். அதனால் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. தகவல் தொடர்பு, சுருங்கி வருகிறது. இருப்பினும், மாணவர்கள் அதிகமாக வாசிக்க வேண்டும். அது உங்கள் புரிதலை அதிகரிப்பதுடன், உங்கள் பார்வையை விரிவடைய செய்யும். ஒவ்வொருவரின் சுய முன்னேற்றத்துக்கான முக்கியமான காரணிகளில் ஒன்றாக வாசிப்பு பழக்கம் திகழ்கிறது. வாசிப்பு பழக்கம், வாழ்நாள் முழுவதும் மாணவர்களுக்கு உதவும்.

ஒரு ஆணுக்கு கல்வி புகட்டினால், அது அவனுக்கு மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு பெண்ணுக்கு கல்வி புகட்டினால், அந்த குடும்பமே படித்ததாக அர்த்தம் என்று மகாத்மா காந்தி கூறினார். கல்வியில் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்படுகிறது.

கலாசார பாரம்பரியம்

குழந்தைப்பருவத்தில் இருந்தே மாணவர்களுக்கு கலாசாரத்தை கற்பிக்க வேண்டும். பெண்கள், வயதானவர்கள் ஆகியோரிடம் எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். நமது கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு.

கோடிக்கணக்கான ரூபாய்களை குவித்து வைத்திருப்பதில் பயன் இல்லை. அவ்வளவு இருந்தாலும், 2 சப்பாத்திகளை சாப்பிட்டு விட்டு, 6 அடி இடத்தில்தான் தூங்கப் போகிறார்கள். நாம் எவ்வளவு வளர்ந்தாலும், நமது வேர்களை மறக்கக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்