சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்கள்: மீட்பு பணியில் பின்னடைவு
|தொழிலாளர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உத்தர்காசி,
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-தண்டல்கான் இடையே சுமார் 4½ கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ந் தேதி இந்த சுரங்கப்பாதையில் வழக்கம் போல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
அப்போது அங்கு பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்க தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுக்குள் அங்கு குவிந்தன.
சுரங்கத்தின் இடிபாடுகளில் துளையிட்டு அதனுள் இரும்பு குழாய்களை செலுத்தி அதன் வழியே தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டது. அதன்படி அமெரிக்க எந்திரம் மூலம் இடிபாடுகளில் துளையிடும் பணி தொடங்கி நடந்து வந்தது.
22 மீட்டர் தூரத்துக்கு துளையிட்ட நிலையில் கடந்த 17-ந் தேதி சுரங்கப்பாதைக்குள் ஒரு பலத்த விரிசல் சத்தம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீட்புக்குழுவினர் துளையிடும் பணியை நிறுத்தினர்.
அதனை தொடர்ந்து, சுரங்கத்தின் சில்க்யாரா மற்றும் பார்கோட் முனையில் இருந்து எதிர்முனை நோக்கி துளையிடுவது, சுரங்கப்பாதை அமைக்கப்படும் மலையின் உச்சியில் இருந்து செங்குத்தாக துளையிடுவது போன்ற மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
எனினும் குகைக்குள் கிடைமட்டமாக இரும்பு குழாய்களை செலுத்தி தொழிலாளர்களை மீட்பதிலேயே மீட்பு குழுக்கள் தீவிர கவனம் செலுத்துகின்றன. அதன்படி இடிபாடுகளில் துளையிடும் பணி கடந்த 21-ந் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது.
அந்த குழாய் வழியாக சுரங்கப்பாதைக்குள் கேமரா அனுப்பப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டது. அதன் மூலம் சுரங்கத்துக்குள் 41 தொழிலாளர்களும் நலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் பிற்பகலில் இடிபாடுகளுக்கு இடையில் 45 மீட்டர் தூரத்துக்கு மீட்பு குழாய்கள் செலுத்தப்பட்டன. 57 மீட்டர் நீளமுள்ள இடிபாடுகளில் 45 மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் அனுப்பப்பட்டதால் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு முன்பாக தொழிலாளர்கள் மீட்கப்பட்டு விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று முன்தினம் இரவு துளையிடும் பணியில் இடையூறு ஏற்பட்டது. இதனால் துளையிடும் பணிகள் நிறுத்தப்பட்டன. எனினும் நேற்று அதிகாலை இடிபாடுகளில் துளையிடும் பணிகள் மீண்டும் தொடங்கின.
இதனிடையே இடிபாடுகளில் துளையிட பயன்படுத்தப்பட்டு வரும் 25 டன் எடை கொண்ட எந்திரம் வைக்கப்பட்டிருக்கும் தளத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று இரவு துளையிடும் பணி மீண்டும் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இது 12 நாட்களாக தொடரும் மீட்பு பணியில் மீண்டும் பின்னடவை ஏற்படுத்தியது.
ஆகர் துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. இதுவரை சில்க்யாரா சுரங்கப்பாதையில் மீட்புப் படையினர் 46.8 மீட்டர் தூரம் வரை துளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தர்காசி மாவட்டத்தின் சின்யாலிசவுரில் உள்ள சுகாதார மையத்தில் 41 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை அங்கு அழைத்து செல்வதற்காக சுரங்கப்பாதைக்கு அருகில் 41 ஆம்புலன்சுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.