உத்தரகாண்ட் இளம்பெண் கொலை: உல்லாசமாக இருந்தால் ரூ.10 ஆயிரம்! பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய விடுதியின் உரிமையாளர்
|விடுதி உரிமையாளர் அங்கு வருகை தரும் விருந்தினர்களுடன் அந்த பெண் பாலியல் உறவுகொள்ள வற்புறுத்தினார்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகனுக்கு சொந்தமான ரிஷிகேஷ் அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் வரவேற்பாளர் ஆக பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக சனிக்கிழமை காலை மீட்கப்பட்டார்.
முன்னதாக, கடந்த 18-ம் தேதி முதல், சொகுசு விடுதியில் பணியாற்றி வந்த 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை. இது குறித்து 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண்ணின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா மீது போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் கடந்த 22-ம் தேதி வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம்பெண் அங்கிதாவை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், அங்கிதாவை விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், 'சீலா கால்வாயில்' இருந்து பெண்ணின் சடலம் சனிக்கிழமை காலை மீட்கப்பட்டது.இந்த வழக்கில், ரிசார்ட்டின் உரிமையாளர் புல்கித் ஆர்யா, அதன் மேலாளர், உதவி மேலாளர் ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் 14 நாள் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் ஆண் நண்பர் ஒருவருடன் அந்த பெண் உரையாடியதில் இருந்து முக்கிய தகவல்கள் சில தெரியவந்துள்ளன என்று போலீஸ் தரப்பில் இன்று கூறப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் ஆண் நண்பர் கூறியிருப்பதாவது:-
அந்த பெண் வேலை பார்த்த ரிசார்ட்டின் உரிமையாளரின் வேண்டுகோளின்படி, ரிசார்ட்டிற்கு வருகை தரும் விருந்தினர்களுடன் அந்த பெண் உடலுறவு கொள்ள உரிமையாளர் வற்புறுத்தினார். ஆனால் இதற்கு அந்த பெண் மறுத்ததால் கொல்லப்பட்டார்.
அந்த பெண் கொல்லப்பட்ட அன்றிரவு, தன்னுடைய ஆண் நண்பனை போன் மூலம் அழைத்து, "தான் பெரும் சிக்கலில் இருப்பதாக" கூறியுள்ளார். மேலும் "நான் பணிபுரிந்து வரும் ரிசார்ட்டின் உரிமையாளரும் மேலாளர்களும் இங்கு வரும் விருந்தினர்களுடன் உடலுறவு கொள்ளுமாறு என் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கின்றனர்" என்று புலம்பியுள்ளார்.
அதனை தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு மேல் அந்த பெண்ணின் போன், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. இதனையடுத்து அந்த பெண்ணின் நண்பர், ரிசார்ட் உரிமையாளரான புல்கித் ஆர்யாவை போனில் அழைத்தார். புல்கித் ஆர்யா கூறுகையில் "அந்த பெண் தூங்குவதற்காக தன் அறைக்கு சென்றுவிட்டாள்" என்று பதிலளித்துவிட்டு போனை அணைத்துவிட்டார்.
மறுநாள் காலை, அந்த பெண்ணின் நண்பர், ரிசார்ட் உரிமையாளரான புல்கித் ஆர்யாவை போனில் அழைத்தார். ஆனால் போன் சுவிட்ச்-ஆப் ஆக இருந்தது.உடனே, ரிசார்ட்டின் மேலாளர் அங்கித்திடம் பேசினார். அவர் "புல்கித் ஆர்யா உடற்பயிற்சி கூடத்தில் உள்ளார்" என்று பதிலளித்துவிட்டு போனை அணைத்துவிட்டார்.
அதன்பின், ரிசார்ட்டின் சமையல்காரரிடம் பேசியுள்ளார். அவர் "நேற்று முழுவதும் தான் அந்தப் பெண்ணைப் பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அந்த பெண்ணின் நண்பர் போலீசிடம் தெரிவித்தார்.
கொலைசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து அவரது நண்பருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் வெளியகியுள்ளன.
அதில், சொகுசு விடுதிக்கு வரும் விஐபி விருந்தினர்களுடன் உல்லாசமாக இருந்தால் ரூ.10 ஆயிரம் தரப்படும் என்று விடுதியின் உரிமையாளர் தன்னை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்துவதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே இன்று, ரிசார்ட்டின் உரிமையாளர் புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமான, ரிசார்ட் அருகே உள்ள ஊறுகாய் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிரான சாட்சியங்களை அழிக்கும் முயற்சியாக வேண்டுமென்றே தீ வைத்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாஜக தலைவரும், புல்கிட் ஆர்யாவின் தந்தை வினோத் ஆர்யாவுக்கு எதிராகவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது சொகுசு விடுதியின் சில பகுதிக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். மேலும், பாஜக எம்.எல்.ஏ,வின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்நிலையில், மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் கைது செய்யப்பட்ட புல்கிட் ஆர்யாவின் தந்தையான வினோத் ஆர்யாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கரண் மஹ்ரா கூறியிருப்பதாவது, "செப்டம்பர் 18 அன்று இளம்பெண் காணாமல் போனார், ஆனால் நான்கு நாட்களுக்குப் பிறகு தான் போலீஸ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மாநில அரசு தனது நடவடிக்கைகளில் தீவிரம் காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது. உத்தரகாண்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை" என்று குற்றம்சாட்டினார்.
மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கை வெறும் கண்துடைப்பாகும். ரிசார்ட்டின் ஒரு பகுதி மட்டுமே இடிக்கப்பட்டுள்ளது. இது ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாகவும் இருக்கலாம் என காங்கிரஸ் தலைவர் கரிமா தசவுனி தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.பெண் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க போலீஸ் டிஐஜி பி.ரேணுகா தேவி தலைமையில் ஒரு குழு அமைத்து முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி ஹான்ஸ் உத்தரவிட்டுள்ளார்.