உத்தரகாண்ட்: ஆற்றுக்குள் பாய்ந்த வேன்; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
|உத்தரகாண்டில் ஆற்றுக்குள் வேன் பாய்ந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று மாநில பேரிடர் பொறுப்பு படையின் உயரதிகாரி அச்சம் தெரிவித்து உள்ளார்.
ருத்ரபிரயாக்,
உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் இருந்து ருத்ரபிரயாக் நகர் நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு வேன் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. வேனில் 26 பேர் பயணித்து உள்ளனர். அவர்களில் பலர் டெல்லியை சேர்ந்தவர்கள்.
காலை 11 மணியளவில் வேன் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 150 முதல் 200 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்திற்குள் விழுந்தது. வேன் உருண்டு சென்று, அலக்நந்தா ஆற்றுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில், 10 பேர் சம்பவ இடத்திலேயே நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
எனினும், இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து உள்ளது. ரிஷிகேஷ் எய்ம்ஸ் மற்றும் ருத்ரபிரயாக் மாவட்ட மருத்துவமனைகளில் தலா 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என உத்தரகாண்ட் மாநில பேரிடர் பொறுப்பு படையின் தளபதி மணிகாந்த் மிஷ்ரா கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து, படுகாயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. அதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அச்சம் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவத்திற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இரங்கல் வெளியிட்டு உள்ளனர். இதேபோன்று, மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி, மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.