உத்தரகாண்ட்: பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேந்திர பண்டாரி
|பிரதமர் மோடி தலைமையின் கீழ் எனக்கு நம்பிக்கை உள்ளது. நாட்டை முன்னோக்கி வழிநடத்தி செல்வதற்காக அவர் பணியாற்றும் விதம் எனக்கு உந்துதலை ஏற்படுத்தியுள்ளது என்று ராஜேந்திர பண்டாரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உத்தரகாண்டில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜேந்திர பண்டாரி. பத்ரிநாத் தொகுதியை சேர்ந்த சட்டசபை உறுப்பினரான பண்டாரி, முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி மற்றும் மத்திய மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில், பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளார்.
அவருக்கு முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி மற்றும் மத்திய மந்திரி பியூஷ் கோயல் இருவரும் பூங்கொத்து கொடுத்தும், கட்சியின் சால்வை அணிவித்தும் வரவேற்றனர். பின்னர், கட்சியின் உறுப்பினர் என்பதற்கான சான்று அட்டையும் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் ராஜேந்திர பண்டாரி கூறும்போது, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் எனக்கு நம்பிக்கை உள்ளது. நாட்டை முன்னோக்கி வழிநடத்தி செல்வதற்காக அவர் பணியாற்றும் விதம் எனக்கு உந்துதலை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வின் கொள்கைகளில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று அவர் பேசியுள்ளார்.