உத்தரகாண்டில் முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு சிலை
|உத்தரகாண்டில் முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத்தின் சிலையை முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி திறந்துவைத்தார்.
டேராடூன்,
நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நீலகிரி அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
அவரது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் அவருக்கு சிலை நிறுவ மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி தலைநகர் டேராடூனில் பிபின் ராவத்துக்கு சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலையை முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். அத்துடன் அரசின் திட்டம் ஒன்றுக்கும் பிபின் ராவத்தின் பெயரை சூட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத், உத்தரகாண்டின் பெருமை எனவும், உத்வேகம் தரும் அடையாளம் என்றும் புகழாரம் சூட்டினார். பிபின் ராவத்தின் மிகச்சிறந்த வியூகம் மற்றும் ராணுவ தலைமை திறமைக்கு சர்ஜிக்கல் தாக்குதல் மிகச்சிறந்த உதாரணம் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பிபின் ராவத்தின் மகள்களான கிரித்திகா மற்றும் தாரிணி ஆகியோர் கலந்துகொண்டனர்.