கன்னட கொடிக்கு தீவைத்த உத்தரபிரதேச வாலிபர் கைது
|போலீசார் தாக்கியதால் ஆத்திரமடைந்த உத்தரபிரதேச வாலிபர் கன்னட கொடிக்கு தீ வைத்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எச்.எஸ்.ஆர். லே-அவுட்:
ஐ.டி. ஊழியர்
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் அம்ருதேஷ் (வயது 30). இவர் பெங்களூரு உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வேலையை முடித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் நின்று தனது நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் புகைத்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது போலீசார், அம்ருதேஷ் மற்றும் அவரது நண்பரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அம்ருதேஷ் எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் நிலையம் அருகே சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த போலீசார், அவரிடம் போராட்டம் நடத்த வேண்டும் என்றால் சுதந்திர பூங்கா பகுதிக்கு செல்லுமாறு கூறி விரட்டி அடித்துள்ளனர்.
போலீசில் ஒப்படைப்பு
போலீசாரிடம் இருந்து தப்பித்து வந்த அம்ருதேஷ் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த பகுதியில் வீட்டில் பறக்கவிடப்பட்ட கன்னட கொடியை எடுத்து அதற்கு தீ வைத்தார். அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி, கன்னட கொடியை பறித்து தீயை அணைத்தனர்.
மேலும், சிலர் அவரை அடித்து, உதைத்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த ஒய்சாலா போலீசாரிடம் வாலிபரை பிடித்து பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.