< Back
தேசிய செய்திகள்
உத்தர பிரதேசம்: மருமகள் தற்கொலை - மாமனார், மாமியாரை எரித்துக் கொன்ற உறவினர்கள்
தேசிய செய்திகள்

உத்தர பிரதேசம்: மருமகள் தற்கொலை - மாமனார், மாமியாரை எரித்துக் கொன்ற உறவினர்கள்

தினத்தந்தி
|
19 March 2024 11:39 AM IST

அன்ஷிகாவிடம் வரதட்சணை கேட்டு அவரது கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த அன்ஷு கேசர்வானி என்ற நபருக்கு கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்ஷிகா(21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அன்ஷு மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அன்ஷிகாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அன்ஷிகா நேற்று இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அன்ஷிகாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தங்கள் உறவினர்களுடன் அன்ஷுவின் வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அன்ஷுவின் வீட்டிற்கு தீ வைத்தனர். இதனிடையே இந்த மோதல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த காவல்துறையினர், தீப்பற்றி எரிந்த வீட்டில் இருந்து 5 பேரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் இந்த சம்பவத்தில் அன்ஷிகாவின் மாமனார் ராஜேந்திர கேசர்வானி(64) மற்றும் மாமியார் ஷோபா தேவி(62) ஆகிய 2 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். அவர்களது உடல்களை கைப்பற்றி போலீசார் பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்