உத்தரபிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த முறைபெண்...கத்தியால் குத்திய முறைபையன்
|இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற பிரகாஷை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் டி.எம்.காலணி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 26). இவருக்கு 25 வயதுடைய முறைபெண் உள்ளார். இருவரும் ஒரே கல்லூரியில் சட்டம் பயின்று வந்தனர். அந்த பெண் பிரகாஷின் வீட்டில் தங்கி படித்து வருகிறார். பிரகாஷ் தனது முறைபெண்ணை சில வருடங்களாக ஒரு தலையாக காதலித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரகாஷ் வற்புறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு முறைபெண் மறுத்துள்ளார். இதையடுத்து திருமணத்திற்கு மறுத்ததால் அவரை அருகில் இருந்த கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு பிரகாஷ் தப்பி சென்றுள்ளார். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள் வந்தனர். அப்போது அந்த பெண் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற பிரகாஷை தேடி வருகின்றனர்.