< Back
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தியில் கற்பிக்கப்படும்: முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தியில் கற்பிக்கப்படும்: முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

தினத்தந்தி
|
20 Oct 2022 11:05 AM IST

உத்தரபிரதேசத்தில் சில மருத்துவ மற்றும் பொறியியல் புத்தகங்கள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன என்று முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

லக்னோ,

மத்திய அரசின் உள்துறை மந்திரியாகவும், அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு தலைவராகவும் உள்ள அமித்ஷா தலைமையிலான குழு சமீபத்தில் ஜனாதிபதியிடம் அளித்துள்ள அறிக்கையில், ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மற்றும் பிராந்திய மொழிகள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் முதல் முறையாக இந்தியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி மத்திய பிரதேசத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தொடங்கி வைத்தார்.அப்போது இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு புத்தகங்களை அமித்ஷா வெளியிட்டார்.

இந்தியில் மருத்துவ படிப்பு என்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளரும், நிபுணருமான டாக்டர் நரேஷ் புரோகித் கருத்து தெரிவித்துள்ளார்.எம்.பி.பி.எஸ். என்பது அடிப்படை பட்ட படிப்பு அல்ல. உயிராபத்தான சூழலில் டாக்டர்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்.

உலக சுகாதார அமைப்பு, யுனிசெப் போன்றவற்றின் மருத்துவ பத்திரிகைகள், வழிமுறைகள், ஒழுங்குமுறைகளை டாக்டர்கள் பின்பற்ற வேண்டும். அவை ஆங்கிலத்தில் தான் உள்ளன. இந்தியில் மருத்துவம் படித்தால் அவர்கள் இந்தியாவுக்கு வெளியே போய் மேல்படிப்பு படிக்கவோ, ஆராய்ச்சி நடத்தவோ முடியாது.

வெறும் எம்.பி.பி.எஸ்.சுடன் படிப்பை நிறுத்த மாட்டார்கள். அதை முடித்த உடனேயோ, பின்னரோ அவர்கள் உயர் படிப்பு படிப்பார்கள். அவர்களுக்கு முதுநிலை படிப்புகள், மாநில மொழிகளில் வர வேண்டிய தேவை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில், உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, "உத்தரபிரதேசத்தில் சில மருத்துவ மற்றும் பொறியியல் புத்தகங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டு முதல், மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்தப் பாடங்களின் படிப்புகள் இந்தியிலும் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

இது குறித்து இன்று உத்தரபிரதேச துணை முதல் மந்திரி பிரஜேஷ் பதக் தெரிவித்திருப்பதாவது,"மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை இந்தியிலும் கற்பிக்க உ.பி அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக சில மருத்துவ புத்தகங்களும் இந்தியில் அச்சிடப்பட்டுள்ளன. இதற்காக அமைக்கப்பட்ட குழு மூலம் மேலும் பணிகள் நடந்து வருகின்றன" என்று கூறினார்.

மேலும் செய்திகள்