< Back
தேசிய செய்திகள்
உத்தர பிரதேசம்: பெற்றோரை செங்கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கறிஞர்
தேசிய செய்திகள்

உத்தர பிரதேசம்: பெற்றோரை செங்கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கறிஞர்

தினத்தந்தி
|
22 Feb 2024 1:23 PM GMT

போலீசார் நடத்திய விசாரணையில் வழக்கறிஞர் மனோஜ் பால் தனது பெற்றோரை செங்கல்லால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பருக்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் மனோஜ் பால்(வயது 36). இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் மனைவி நம்ரதாவுடன் வசித்து வந்தார். அதே வீட்டின் முதல் மாடியில் அவரது தந்தை ஓம் பிரகாஷ்(வயது 70) மற்றும் தாய் பப்லி(50) ஆகியோர் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மனோஜ் பால், வீட்டின் மாடியில் வசித்து வந்த தனது பெற்றோருடன் உறங்கப்போவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து கீழே இறங்கி வந்த அவர், தனது மனைவி நம்ரதாவை கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சென்ற பிறகு தனது பெற்றோரை கொலை செய்துவிட்டதாக மனைவி நம்ரதாவிடம் மனோஜ் பால் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நம்ரதா, உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மனோஜ் பால் தனது பெற்றோரை செங்கல்லால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இது குறித்து மாவட்ட எஸ்.பி. விகாஸ் குமார் கூறுகையில், "மனோஜ் பாலின் தந்தை ஓம் பிரகாஷ் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர். இருப்பினும் இந்த கொலைக்கான உண்மையான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்