உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாதாக்கள் சட்ட வழக்கில் பகுஜன்சமாஜ் கட்சி எம்.பி.க்கு 4 ஆண்டு சிறை
|உத்தரப்பிரதேச மாநிலத்தில், தாதாக்கள் சட்ட வழக்கில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது எம்.பி. பதவி பறிபோகிறது.
எம்.பி., அண்ணன் மீது வழக்கு
உத்தரப்பிரதேச மாநிலம், காசிப்பூர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. அப்சல் அன்சாரி (வயது 69) ஆவார். இவரது தம்பி முக்தர் அன்சாரி (59), இவர் தாதாவாக இருந்து அரசியல்வாதியானவர். இவர் 5 முறை உ.பி. சட்டசபை உறுப்பினராக இருந்தவர்.
இவர்கள் இருவருக்கும் காசிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணானந்த் ராய் கொலை செய்யப்பட்டதிலும், வாரணாசி வியாபாரி நந்த் கிஷோர் ருங்க்தா கடத்திக்கொலை செய்யப்பட்டதிலும் தொடர்பு உண்டு. இவர்கள் மீது அங்கு முகமதாபாத் கோட்வாலி போலீஸ் நிலையத்தில், தாதாக்கள் சட்டத்தின் கீழ் 2007-ம் ஆண்டு வழக்கு பதிவானது.
சிறைத்தண்டனை-அபராதம்
இந்த வழக்கு காசிப்பூரில் உள்ள கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் (எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் கோர்ட்டு 1) நீதிபதி துர்கேஷ் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக அப்சல் அன்சாரி கோர்ட்டில் நேற்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். முக்தர் அன்சாரி காணொலிக்காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர்கள் 2 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி முடிவு செய்து, அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டுகளும், முக்தர் அன்சாரிக்கு 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அப்சல் அன்சாரிக்கு ரூ.1 லட்சம் அபராதமும், முக்தர் அன்சாரிக்கு ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
எம்.பி. பதவி பறிபோகும்
அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்தர் அன்சாரி 5 முறை எம்.எல்.ஏ. பதவி வகித்தாலும் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. அவரது மாவ் சதர் தொகுதியில், மகன் அப்பாஸ் அன்சாரி சுகல்தேவ் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.