உத்தர பிரதேசம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 7 பேர் உயிரிழப்பு
|பட்டாசு ஆலையின் உரிமையாளர் ஷாஹித் என்பவரும் வெடி விபத்தில் உயிரிழந்தார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தில் உள்ள மாஹேவா கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று மதியம் 12 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் ஏற்பட்ட வெடிப்பின் சத்தமானது பல கிலோ மீட்டர்கள் தாண்டியும் கேட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. விபத்து நடந்த சமயத்தில் 18 பேர் பட்டாசு ஆலையில் பணியில் இருந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலையின் உரிமையாளர் ஷாஹித்(35) என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார். இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பிரயாக்ராஜ் மண்டல ஏ.டி.ஜி.பி. பானு பாஸ்கர் தெரிவித்துள்ளார்.