உத்தர பிரதேசம்: 10 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை, கொள்ளை வழக்கு - 8 பேருக்கு மரண தண்டனை விதிப்பு
|கொலை, கொள்ளை வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனையும், நகைகளை வாங்கியவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்தவர் ரவிகாந்த் மிஸ்ரா. வருமான வரித்துறை அதிகாரியான இவர், கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி காலை 9 மணிக்கு தனது வீட்டில் இருந்து கிளம்பி பிலிபிட் நகருக்குச் சென்றார். தொடர்ந்து ஏப்ரல் 23-ந்தேதி வீட்டிற்கு திரும்பிய ரவிகாந்த் மிஸ்ரா, தனது வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்.
அதோடு ஜன்னல் கம்பிகள் அகற்றப்பட்டு, மாடியின் கதவும் திறந்து கிடந்தது. இதையடுத்து அவர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது, அவரது 70 வயது தாயார் புஷ்பா, சகோதரர் யோகேஷ் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகிய மூவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டில் இருந்த பணம், நகை உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், 2014-ம் ஆண்டு மே 2-ந்தேதி பித்ரி பகுதியில் உள்ள உமாரியா என்ற கிராமத்தில், ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சில வெள்ளி நாணயங்கள், சில ஆவணங்கள் மற்றும் ஒரு பணப்பையை போலீசார் கைப்பற்றினர். அவை அனைத்தும் ரவிகாந்த் மிஸ்ராவால் அவரது குடும்பத்தினரின் உடைமைகள் என அடையாளம் காணப்பட்டது.
தொடர்ந்து மே 3-ந்தேதி, சந்தேகத்திற்குரிய நபர்களின் புகைப்படங்களை போலீசார் பத்திரிக்கைகளில் வெளியிட்டனர். அப்போது அந்த நபர்களில் சிலர் ரவிகாந்த் மிஸ்ராவின் வீடு அமைந்திருக்கும் பகுதியில் காய்கறி வியாபாரிகளைப் போல் சுற்றித் திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் இந்த கொலை, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அவர்களிடம் இருந்து வாங்கிய நகை வியாபாரியையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 9 பேர் மீதான வழக்கு விசாரணை பரேலி சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ரவிகுமார் திவாகர், 2014-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரியின் வீட்டில் புகுந்து 3 பேரை கொலை செய்துவிட்டு, பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 8 பேருக்கு மரண தண்டனையும், அவர்களிடம் இருந்து நகைகளை வாங்கிய நகை வியாபாரிக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி வாஜித், ஹாசீன், யாசின், நசிமா, ஹாஷிமா, சமீர், சுல்பாம் மற்றும் பாஹீம் ஆகிய 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.