அரசு திட்டங்களை விளம்பரப்படுத்த ராணுவத்தை பயன்படுத்துவதா?காங்கிரஸ் எதிர்ப்பு
|அரசு திட்டங்களை விளம்பரப்படுத்த ராணுவத்தை பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் அந்த கட்சியின் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு தலைவரான ஓய்வுபெற்ற கர்னல் ரோகித் சவுத்திரி நேற்று நிருபர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
'நரேந்திர மோடி அரசு தனது அரசியல் வளர்ச்சிக்காக, அரசு திட்டங்கள் குறித்த சுவரொட்டிகளை ராணுவத்துக்கு வழங்கியுள்ளது. அரசு திட்டங்கள் தொடர்பான 822 'செல்பி மையங்கள்' நாடு முழுவதும் அமைக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அரசு திட்டங்களை விளம்பரப்படுத்த ராணுவத்தை பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைப்புகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நமது ராணுவ வீரர்கள் தற்போது பா.ஜ.க.வுக்கும், பிரதமர் மோடிக்கும் பிரசாரம் செய்வார்களா என்ன? ராணுவத்தின் மதிப்பை இந்த அளவு குறைக்க வேண்டுமா?இது சட்டவிரோதம் என்று கருதுவதால்தான், இதுதொடர்பான உத்தரவை ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவை தங்கள் இணையதளங்களில் வெளியிடவில்லை.'இவ்வாறு அவர் கூறினார்.