< Back
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம்

தினத்தந்தி
|
29 March 2024 3:37 AM IST

அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு 'அச்சுறுத்தலில் நீதித்துறை-அரசியல் மற்றும் தொழில்ரீதியான அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை பாதுகாத்தல்' என்ற தலைப்பில் 600 வக்கீல்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

அதில், மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே, பார் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மனன்குமார் மிஸ்ரா, பிங்கி ஆனந்த், அதிஷ் அகர்வாலா, சேத்தன் மிட்டல் உள்பட 600 வக்கீல்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

2018-2019 ஆண்டு காலகட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்போது, சில சுயநல சக்திகள், கோர்ட்டுகள் மீது செல்வாக்கு செலுத்தவும், அழுத்தம் தரவும் முயன்றனர். தவறான கட்டுக்கதைகளை பரப்ப முயன்றனர்.

அதேபோல், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் இத்தகைய சுயநல சக்திகள் தங்களது அச்சுறுத்தல் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். அரசியல் வழக்குகளில், குறிப்பாக ஊழல் வழக்குகளில் அரசியல் பிரபலங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அவர்களது நிர்பந்த நடவடிக்கைகள் வெளிப்படையாக தெரிகிறது. இத்தகைய தந்திரங்கள் நமது கோர்ட்டுகளை பாதிப்பதுடன், நமது ஜனநாயக கோட்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன.

இந்த வக்கீல்கள், தங்கள் வழக்குகளை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முயற்சிக்கின்றனர். நீதிபதிகள் யார் என்று தெரிந்துகொண்டு, அவர்கள் எப்படி தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று அச்சுறுத்தும்வகையில் சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்புகிறார்கள்.

இவர்கள் பகலில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக வாதிடுகிறார்கள். இரவில், ஊடகம் மூலமாக நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறார்கள்.

கடந்த காலம்தான் கோர்ட்டுகளின் பொற்காலம் என்றும், தற்போது அதற்கு முரணான நிலைமை காணப்படுவதாகவும் தவறான தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள். அதன்மூலம், தங்களது அரசியல் ஆதாயத்துக்காக கோர்ட்டுகளை சங்கடத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.மேலும், பொதுமக்களுக்கு கோர்ட்டுகள் மீதுள்ள நம்பிக்கையை அசைத்து பார்க்கும்வகையில் அவர்களது கருத்துகள் இருக்கின்றன.

அத்துடன், நம் நாட்டு கோர்ட்டுகளை சட்டத்தின் ஆட்சி நடக்காத நாடுகளுடன் ஒப்பிடும் அளவுக்கு கீழே இறங்குகிறார்கள். சாதகமான தீர்ப்பு என்றால் அதை புகழ்வதும், எதிரான தீர்ப்பு என்றால் அதை அவமதிப்பதுமாக இருக்கின்றனர்.

ஆகவே, சுப்ரீம் கோர்ட்டு வலிமையாக நிற்க வேண்டும். இத்தகைய தாக்குதல்களில் இருந்து கோர்ட்டுகளை பாதுகாக்க வேண்டும்.

மவுனமாக இருப்பதோ, எதுவும் செய்யாமல் இருப்பதோ இந்த நபர்களுக்கு கூடுதல் வலிமை அளிப்பதாக ஆகிவிடும். கண்ணியமான மவுனம் காக்க வேண்டிய நேரம் இதுவல்ல. கடந்த சில ஆண்டுகளாக, இம்முயற்சிகள் நடந்து வருகின்றன. அதுவும் அடிக்கடி நடக்கின்றன. தலைைம நீதிபதியின் தலைமை, கடினமான தருணங்களில் மிகவும் முக்கியம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்