< Back
உலக செய்திகள்
தென்கொரியா-அமெரிக்கா கூட்டு போர்ப்பயிற்சி

கோப்புப்படம்

உலக செய்திகள்

தென்கொரியா-அமெரிக்கா கூட்டு போர்ப்பயிற்சி

தினத்தந்தி
|
27 Sept 2022 1:29 AM IST

வடகொரியாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் தென்கொரியா-அமெரிக்கா நாடுகள் கூட்டு போர்ப்பயிற்சியை மேற்கொண்டது.

சியோல்,

வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்ற வேண்டுமென அதன் அண்டை நாடான தென்கொரியாவும், தென்கொரியாவின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவும் முயற்சித்து வருகின்றன.

இந்த விவகாரத்தில் அந்த நாடுகளுக்கு இடையில் மோதல் போக்கு நீடிக்கிறது. அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

வடகொரியாவின் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா மற்றும் தென்கொரியா ராணுவம் அவ்வப்போது கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

கொரிய எல்லையில் நடைபெறும் இத்தகைய கூட்டு போர்ப்பயிற்சி தங்களின் பாதுகாப்பை அச்சுறுத்துவதாக கூறி வடகொரியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இந்தநிலையில் வடகொரியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் நேற்று கூட்டு போர்ப்பயிற்சியை தொடங்கின. 4 நாட்களுக்கு இந்த போர்ப்பயிற்சி நடைபெறும் என இவ்விரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

இந்த போர்ப்பயிற்சியில் அமெரிக்காவின் அணுசக்தி திறன்கொண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் உள்பட இருநாட்டு கடற்படைகளுக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவின் போர்க்கப்பல் தென்கொரியாவுக்கு வந்து போர்ப்பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்த போர்ப்பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்