காஷ்மீரில் ராகுல்காந்தி பாதயாத்திரையில் நடிகை ஊர்மிளா பங்கேற்பு
|காஷ்மீரில் ராகுல்காந்தி பாதயாத்திரையில் இந்தி நடிகை ஊர்மிளா பங்கேற்றார். எழுத்தாளர் பெருமாள் முருகனும் கலந்து கொண்டார்.
ஜம்மு,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை, பல மாநிலங்களை கடந்து, 19-ந் தேதி காஷ்மீருக்குள் நுழைந்தது.
நேற்று ஜம்மு பிராந்தியத்தில் நக்ரோடா நகரில் ராணுவ பாதுகாப்பு அரண் அருகே காலை 8 மணியளவில் பாதயாத்திரை புறப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் முன்னேறிச் சென்றது. சாலையின் இருபுறமும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் நின்று ராகுல்காந்திக்கு வரவேற்பு அளித்தனர். யாத்திரையில் பங்கேற்றவர்கள் தேசிய கொடி ஏந்தி சென்றனர். புறப்பட்ட சற்று நேரத்தில், இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர், பாதயாத்திரையில் இணைந்து கொண்டார். அவர் ராகுல்காந்தியுடன் உரையாடியபடி நடந்து சென்றார்.
பெருமாள் முருகன்
1990-களில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக ஊர்மிளா இருந்தார். 2019-ம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்த அவர், 6 மாதங்கள் மட்டுமே அக்கட்சியில் இருந்தார். 2020-ம் ஆண்டு சிவசேனாவில் சேர்ந்தார்.
நேற்றைய பாதயாத்திரையில், தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் மற்றும் காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல் வானி, முன்னாள் தலைவர் ஜி.ஏ.மிர், முன்னாள் மந்திரி தாரிக் ஹமீத் கர்ரா ஆகியோரும் பங்கேற்றனர்.
பண்டிட் சமூக பெண்கள்
லடாக் பிராந்திய காங்கிரஸ் தலைவர் நவங் ரிக்சின் ஜோரா, 65 காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பாதயாத்திரையில் கலந்து கொண்டார். லடாக் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர் ராகுல்காந்தியிடம் எடுத்துரைத்தார்.
அதுபோல், காஷ்மீர் பண்டிட் சமூக பெண்கள் சிலர், கோல்-கண்டோலி கோவில் வாசலில் ராகுல்காந்தியை வரவேற்க காத்திருந்தனர். பாரம்பரிய உடை அணிந்து, பூ இதழ்களை ஏந்தி நின்றனர். காஷ்மீர் பள்ளதாக்கில் தங்களை மறுகுடியமர்த்த ராகுல்காந்தியால்தான் முடியும் என்று ஒரு பெண் கூறினார்.
திக்விஜய்சிங் கருத்து நிராகரிப்பு
மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய்சிங் நேற்று முன்தினம் ஜம்முவில் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ''இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலுக்கான ஆதாரம் எதையும் காட்டவில்லை'' என்று கூறியிருந்தார்.
நேற்றைய பாதயாத்திரையின்போது இதுபற்றி ராகுல்காந்தியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி கூறியதாவது:-
திக்விஜய்சிங் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ராணுவம் ஆதாரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இதுதான் எங்கள் அதிகாரபூர்வ நிலைப்பாடு என்று அவர் கூறினார்.
நற்பெயரை கெடுக்க பணம் செலவழிக்கிறது
''உங்களை 'பப்பு' என்று சொல்வதற்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சி கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுகிறதா?'' என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு ராகுல்காந்தி கூறியதாவது:-
பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும்தான் எனது நற்பெயரை சீர்குலைக்க ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வாரி இறைக்கின்றன.
பணத்தால் நற்பெயரை கெடுக்கலாம், அரசாங்கத்தை விலைக்கு வாங்கலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அதெல்லாம் உண்மை ஆகாது. பணம், அதிகாரம் ஆகியவற்றை உண்மை வீழ்த்திவிடும். இது, பா.ஜனதா தலைவர்களுக்கு மெல்ல மெல்ல புரிந்து வருகிறது என்று அவர் கூறினார்.