சர்ச்சையில் சிக்கிய பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது மோசடி வழக்கு
|பூஜா கேட்கரின் தாய் மனோரமா கேட்கர் நிலப்பிரச்சினையில் விவசாயியை துப்பாக்கியால் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
சர்ச்சையில் சிக்கிய பயிற்சி பெண் ஐ ஏ எஸ் அதிகாரி பூஜா கேட்கர் மீது மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மோசடி வழக்கு பதிவு செய்து உள்ளது.
மராட்டிய மாநிலம் புனே கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் அந்தஸ்தில் பயிற்சி ஐ ஏ எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேட்கர்(வயது34). விதிமுறையை மீறி தனது சொகுசு காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தியது, அலுவலகத்தில் தனியறை கேட்டு அடம் பிடித்தது, கூடுதல் கலெக்டரின் அறையை ஆக்கிரமித்தது போன்ற வெவ்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
இதையடுத்து வாசிம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். சர்ச்சைகளுக்கு மத்தியில் பூஜா கேட்கர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இது குறித்து விசாரிக்க மத்திய அரசின் கூடுதல் செயலாளர் மனோஜ்குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.
இதற்கிடையே பூஜா கேட்கரின் தாய் மனோரமா கேட்கர் நிலப்பிரச்சினையில் விவசாயியை துப்பாக்கியால் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இதேபோல அவரது தந்தை திலீப் கேட்கர் அரசு அதிகாரியாக இருந்த போது 2 முறை லஞ்ச வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்தநிலையில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் பூஜா கேட்கர் தனது பெயர், தந்தை பெயர், தாய் பெயர், புகைப்படம், கையெழுத்து, இ-மெயில் ஐ டி, செல்போன் எண், முகவரி ஆகியவற்றை மாற்றி அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அவர் மீது போலீசில் மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளது.
மேலும் அவரது ஐ ஏ எஸ் தேர்வை ரத்து செய்யவும், எதிர்காலத்தில் அவர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத தடை விதிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதற்கிடையே ரூ,2 லட்சம் சொத்து வரி செலுத்தாததற்காக பூஜா கேட்கரின் தாய் மனோரமா கேட்கர் தொடர்புடையே என்ஜினீயரிங் நிறுவனத்துக்கு பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.