ஐ.பி.எஸ் வேண்டாம்; ஐ.ஏ.எஸ் ஆவதே லட்சியம்! யு.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து 2வது முறையாக சாதித்து காட்டிய திவ்யா
|அவர் தனது ஐபிஎஸ் பயிற்சியுடன் கடுமையாக உழைத்து மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாரானார்.
பாட்னா,
யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வு 2022க்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதில் பீகாரைச் சேர்ந்த திவ்யா சக்தி யு.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அவர் 58வது ரேங்க் பெற்றுள்ளார்.
முன்னதாக, தன்னுடைய இரண்டாவது முயற்சியிலேயே, 2019ல் அவர் யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று 79வது ரேங்க் பெற்றார். எனினும், அவருக்கு அப்போது ஐபிஎஸ் அதிகாரியாகும் வாய்ப்பே கிடைத்தது.
ஆனால், ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையில், அவர் தனது ஐபிஎஸ் பயிற்சியுடன் கடுமையாக உழைத்து மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாரானார். அதன்படி, இம்முறை அகில இந்திய அளவில் அவர் 58வது இடத்தைப் பிடித்தார். இதனால் இப்போது அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனையடுத்து, அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அவரை வாழ்த்தினார்கள். அவருடைய தந்தை ஒரு மருத்துவர் ஆவார். ஜலால்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா சக்தி, பிட்ஸ் பிலானியில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். மேலும் பொருளாதாரத்தில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றவர் ஆவார்.