பீகாரில் ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்து உபேந்திர குஷ்வாகா விலகல் - புதிய கட்சி தொடங்க முடிவு
|பீகாரில் ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்து உபேந்திர குஷ்வாகா விலகினார். புதிய கட்சி தொடங்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
பாட்னா,
பீகாரில் ராஷ்டிரீய லோக் சமதா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வந்த முன்னாள் மத்திய மந்திரி உபேந்திர குஷ்வாகா கடந்த 2021-ம் ஆண்டு தனது கட்சியை நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துடன் இணைத்து விட்டு, கட்சியில் சேர்ந்தார்.
பீகாரில் தற்போது ஆளும் மகா கூட்டணியை வருங்காலத்தில் தேஜஸ்வி யாதவ் தலைமை ஏற்று செல்வார் என சமீபத்தில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்தார். இதனால் அவர் மீது அதிருப்தியில் இருந்த குஷ்வாகா, தொடர்ந்து மாநில அரசை விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து விலகினார். அத்துடன் ராஷ்டிரீய லோக்தந்திரிக் ஜனதாதளம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கப்போவதாகவும் அறிவித்தார்.
ஐக்கிய ஜனதாதளத்தில் இணைந்த 2 ஆண்டுகளுக்குள், அந்த கட்சியில் இருந்து விலகியிருக்கும் குஷ்வாகாவின் முடிவு மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.