உ.பி.: துக்க நிகழ்வில் சோகம்; சுவர் இடிந்து விழுந்ததில் 14 பெண்கள் காயம்
|உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் பிரசவத்தின்போது உயிரிழந்த நிலையில், அவரை காண குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் என பலரும் வீட்டுக்கு வந்திருந்தனர்.
பிரோசாபாத்,
உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் நகரில் கமல்பூர் ராகாவ்லி என்ற கிராமத்தில் பெண் ஒருவர் பிரசவத்தின்போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அவருடைய இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்ற பெண்கள் சுவர் இடிந்து காயமடைந்து உள்ளனர்.
இதுபற்றி அந்த பெண்ணின் உறவினரான ரியாசுதீன் கூறும்போது, எனது உறவினரை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். இதில், அவர் உயிரிழந்து விட்டார். பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், அவருடைய உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் என பலரும் வீட்டுக்கு வந்திருந்தனர். அப்போது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில் 15 முதல் 16 பெண்கள் வரை சிக்கி கொண்டனர் என கூறியுள்ளார்.
இதில் ரியாசுதீனின் தாயாரும் பலத்த காயமடைந்து உள்ளார். அவருக்கு கமல்பூரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் 14 பெண்கள் காயமடைந்து உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.