உ.பி. மக்களவை தேர்தலில் போட்டியிட்டால் நிதிஷ் குமார் டெபாசிட் கூட வாங்க முடியாது: சுசில் மோடி தாக்கு
|உத்தர பிரதேச மக்களவை தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது என பா.ஜ.க. எம்.பி. சுசில் மோடி தாக்கி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் கூறும்போது, 2024 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் பூல்பூர் தொகுதியில் இருந்து நிதிஷ் குமார் போட்டியிடலாம் என நேற்று கூறினார்.
இந்நிலையில், பீகாரின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் நாடாளுமன்ற மேலவை எம்.பி.யான சுசில் குமார் மோடி இதுபற்றி இன்று கூறும்போது, நிதிஷ் ஜி உத்தர பிரதேசத்திற்கு வந்து தேர்தலில் டெபாசிட் இழக்க வேண்டும் என்பது அகிலேஷ் யாதவின் விருப்பம்.
உத்தர பிரதேசத்தில் அகிலேஷுக்கு என எந்தவொருவேட்பாளரும் கிடையாது என ஒவ்வொருவருக்கும் தெரியும். கடந்த மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து அகிலேஷ் போட்டியிட்டார். என்ன நடந்தது? கூட்டணி பின்பு முறிந்து போனது. பா.ஜ.க. 62 இடங்களில் வெற்றி பெற்றது என மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் பூல்பூர் தொகுதியில் இருந்து போட்டியிட நிதிஷ் குமார் முயற்சிக்க வேண்டும். அதன்பின்பு, டெபாசிட் வாங்க முடியாமல் பீகாருக்கு திரும்புவார். பூல்பூரை விடுங்கள்.
உத்தர பிரதேசத்தின் எந்த பகுதியில் இருந்தும் போட்டியிடுங்கள். நிதிஷ் குமாருக்கு நான் சவால் விடுக்கிறேன். தேர்தலில் அவரால் டெபாசிட் வாங்க முடியாது என்றும் மோடி கூறியுள்ளார்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்கும் முயற்சிக்காக சமீபத்தில் டெல்லி சென்ற நிதிஷ் குமார், பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது.