< Back
தேசிய செய்திகள்
குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை

தினத்தந்தி
|
25 May 2024 11:57 AM IST

உத்தரபிரதேசத்தில் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய கர்ப்பிணி மனைவியின் வயிற்றைக் கிழித்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

படவுன்,

உத்தரபிரதேச மாநிலம் படவுனில் வசித்து வருபவர் பன்னா லால். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பன்னா லால் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று அனிதாவை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட அனிதாவின் பெற்றோரிடம், உங்களது மகளை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து ஆண் குழந்தைக்கு தந்தையாகி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அனிதா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று தனக்கு தெரிந்தாக வேண்டுமென்று பன்னா லால் சண்டையிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று வயிற்றைக் கிழித்து பார்த்து தெரிந்துகொள்வதாக கூறி அனிதாவின் வயிற்றில் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் அனிதா பலத்த காயமடைந்த நிலையில் அவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனிதா பரேலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பன்னா லால் மீது அனிதாவின் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த, விரைவு நீதிமன்ற நீதிபதி சவுரப் சக்சேனா, பன்னா லாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், ரூ.50,000 அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், கூடுதலாக ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்