உ.பி.: தேநீர் கடைக்குள் நள்ளிரவில் புகுந்த லாரி; 3 பேர் பலி
|லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் இடவா மாவட்டத்தில் மாணிக்பூர் என்ற இடத்தில் தேநீர் கடை ஒன்று உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த லாரி ஒன்று இதன் மீது திடீரென மோதி விபத்து ஏற்படுத்தியது.
இதில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் இடவா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சஞ்சய் குமார் வர்மா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த இடத்தில் இருந்து லாரி அகற்றப்பட்டு உள்ளது. போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.
சம்பவம் பற்றி சஞ்சய் கூறும்போது, உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை. லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. வாகனத்தில் ஜார்க்கண்ட் பதிவெண் இருந்தது.
அதனை கைப்பற்றி இருக்கிறோம். சம்பவ பகுதியில் இருந்தவர்களை மீட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதன்பின்னரே விபத்திற்கான காரணம் பற்றி தெரிய வரும் என்று கூறியுள்ளார்.