உ.பி.: சமையல் கியாஸ் சிலிண்டரில் இருந்து கசிந்த நீர்; காங்கிரஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
|உத்தர பிரதேசத்தில் சமையல் கியாஸ் சிலிண்டரில் இருந்து நீர் கசிந்தது பற்றி காங்கிரஸ் வீடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஆக்ரா,
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் சமையல் கியாஸ் சிலிண்டரில் இருந்து நீர் கசிந்த வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு காங்கிரஸ் கட்சி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் சிலிண்டரில் நீர் இருக்கிறது என கூறுகிறார். மற்றொரு நபர், அந்த சிலிண்டரின் வாய் பகுதியை ஊசியால் குத்துகிறார்.
இதன்பின் சிலிண்டரில் இருந்து நீர் பீய்ச்சி அடித்தபடி வெளியேறுகிறது. இதுபற்றி உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சி டுவிட்டரில், சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை எப்படி தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது என விவரித்து உள்ளது.
அந்த பகுதியில் உள்ள சிலிண்டர்களில் நீர் கொண்டு அடைக்கப்பட்டு கனம் வாய்ந்த சிலிண்டராக மாற்றப்பட்டு, கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களின் பணம் மோசடி செய்யப்படுகிறது மற்றும் கொள்ளை அடிக்கப்படுகிறது என குற்றச்சாட்டாக கூறியுள்ளது. எப்படி இந்த மோசடி நடைபெறுகிறது? இந்த விவரம் வெளியிடப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.
நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில், ராஜஸ்தான் போன்ற காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் எப்படி சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.500-க்கு கீழ் வைத்திருக்கிறது என பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. கற்று கொள்ள வேண்டும் என கடிந்து கொண்டது. 2024-ல் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் இந்த கொள்ளைக்கு முடிவு கட்டப்படும் என்று அக்கட்சி கூறியிருந்தது.