உத்தரபிரதேச அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 11 நோயாளிகள் பலி
|உத்தரபிரதேச அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 11 நோயாளிகள் பலியாகினர். இதன்படி 5 நாட்களில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல்லியா,
உத்தரபிரதேசத்தின் பல்லியா நகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 15-ந் தேதி முதல் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் நேற்று முன்தினம் வரை 4 நாளில் 57 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 60 வயதை கடந்தவர்கள் ஆவர்.
மாநிலத்தில் நீடித்து வரும் வெப்ப அலை காரணமாக இந்த உயிரிழப்புகள் நிகழந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விவகாரத்தில் ஆஸ்பத்திரின் தலைமை மருத்துவ சூப்பிரண்டு டாக்டர் திவாகர் சிங், அசம்காருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆஸ்பத்திரியில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 178 நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதிலும் 11 நோயாளிகள் பலியாகினர். இதன் மூலம் 5 நாட்களில் 68 நோயாளிகள் இந்த ஆஸ்பத்திரியில் இறந்துள்ளனர்.
இந்த உயிரிழப்புகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக சிறப்பு கமிட்டி ஒன்றை மாநில சுகாதாரத்துறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளது. அங்கு விசாரணை நடத்திய இந்த குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.
பலியானவர்கள் அனைவரும் முதியோர் என்பதால் இது தற்செயல் நிகழ்வுதான் என இந்த கமிட்டி கூறியுள்ளது. எனினும் இந்த சம்பவத்தின் பின்னணியில் பொதுவான காரணம் எதுவும் உள்ளதா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் கமிட்டி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.