உ.பி-யில் 15 வயது சிறுமியை கடத்தி ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்..!
|உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சிறுவன் கடத்திச்சென்றான்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் கடந்த டிசம்பர் 15ந்தேதி வழக்குப்பதிவு செய்து, பல்வேறு இடங்களில் சிறுமியையும், சிறுவனையும் தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன், சிறுமியை குஜராத்திற்கு அழைத்துச் சென்று தனது கட்டுப்பாட்டில் வைத்து ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
சிறுவன், குஜராத்தில் இருந்து தனது கிராமத்திற்குத் திரும்பியபோது, நாக்ரா நகரில் உள்ள கட்வார் மோர் அருகே போலீசார் கைதுசெய்தனர். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து குழந்தைகள் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.